சிறிலங்காவின் பல்லினத் தன்மையை அடியோடு அழித்து – நாட்டை சிங்கள, பௌத்த தேசமாக மாற்றுவதற்கே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செயலணியை நியமித்துள்ளார் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran).
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தலைமையிலான அரச தலைவர் செயலணிக்குள் தமிழர்களை உள்வாங்கும் விவகாரம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தமிழின பற்றுள்ள, சுயகௌரவமுள்ள எந்தவொரு தமிழனும் இந்தச் செயலணியில் பங்கேற்கப்போவதில்லை என்பது நிச்சயமானது.
அவ்வாறு இருக்கையில்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் செந்தில் தொண்டமானும் செயலணியை ஏற்று அதில் தமிழ் உறுப்பினர்களை உள்ளீர்ப்பதற்கு துணையான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
இதன் மூலம் ஏற்படவுள்ள பாரதூரமான விளைவுகளை இவர்கள் இருவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கான விவாக, விவாகரத்துச் சட்டம், தேசவழமைச்சட்டம், கண்டியச் சட்டம், முக்குவர் சட்டம் என்பன இந்த நாட்டில் காணப்படுகின்றன.
அவை இந்த நாட்டின் பல்லினத்தினை வெளிப்படுத்துவதாகும். அவ்வாறு இருக்கையில் அச்சட்டங்கள் அகற்றப்பட்டு ஒரே சட்டம் இயற்றப்பட்டால் நாட்டின் பல்லினத்தன்மை அடியோடு அழிக்கப்படும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.