படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தாலிபான்களின் உயர் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா தமது முதல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றிய நிலையில், குறித்த தகவலை தாலிபான்கள் தற்போது உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2016 முதலே மதத்தலைவராக செயல்பட்டுவரும் அகுந்த்ஸாதா, தங்கள் இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னரும் பொதுவெளியில் தோன்ற மறுத்து வந்துள்ளார்.
மேலும், புதிய தாலிபான்களின் ஆட்சியில் அவரது பங்களிப்பு தொடர்பிலும் கேள்வி எழுந்தது. மட்டுமின்றி, அகுந்த்ஸாதா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவலாக பேசுபொருளானது.
இந்த நிலையிலேயே, சனிக்கிழமை Darul Uloom Hakimah பள்ளி ஒன்றிற்கு சென்ற அகுந்த்ஸாதா தாலிபான் போராளிகள் மற்றும் தமது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
குறித்த நிகழ்வுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் 10 நிமிடங்கள் கொண்ட ஒடியோ பதிவை தாலிபான்கள் தங்கள் சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளனர். அரசியல் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காத அகுந்த்ஸாதா, தாலிபான்களின் ஆட்சிக்கு கடவுளின் துணை இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.