வடமாகாணத்தில் இதுவரை 833 கொரோனா இறப்புகள் பதிவு: சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாகக் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

அந்த வகையில் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனி வரும் நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் சுகாதார முறைகளைப் பின்பற்றிச் செயற்படவேண்டும். கடந்த புதுவருடத்தின் போது ஏற்பட்ட கொத்தணி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இதுவரை வடமாகாணத்தில் 38,850 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல வடமாகாணத்தில் இதுவரை 833 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாகக் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

வடமாகாணத்தில் 30 வயதுக்கு மேல் 572,933 பேர் முதல் டோஸையும் 491,201 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். அதேபோல வடமாகாணத்தில் 20-30 வயதுக்குட்பட்டவர்களில் முதல் டோஸை 118,820 பேரும் இரண்டாவது டோஸை 47,543 பேரும் பெற்றுள்ளனர்.

வடமாகாணத்தில் 16-19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் 43,034 பைசர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதேபோல 12-19 வயதுக்குட்பட்ட விசேட தேவை மற்றும் நாள்பட்ட நோய்களுக்குள்ளான 535 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

வடக்கில் சுகாதார திணைக்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணி நவம்பர் 3 முதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் ஆதார வைத்தியசாலைகளிலும் இடம்பெறும்.

சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெறும். வடமாகாணத்தில் பத்தாயிரம் சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.