மதியம் நன்றாக பசிக்கும் நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் மறந்தும் சாப்பிடாதீங்க!

தற்போதைய அவசர உலகில் பலருக்கும் காலையில் உணவு சாப்பிட பலருக்கும் நேரம் இருப்பதில்லை. அதனால் பலரும் மதியம் தான் சாவகாசமாக பிடித்த உணவுகளை ஒரு கட்டு கட்டுகின்றனர். அதற்கேற்றார் போல அந்த சமயத்தில் அதிகம் பசியும் இருக்கும்.

அதே சமயம் கிடைத்த உணவுகளை எல்லாம் மதியம் சாப்பிட கூடாது.

மதியம் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து காண்போம்.

பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில், அரிசியை சுத்தப்படுத்த பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அரிசி வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைகளில் திரும்பத் திரும்ப பாலீஷ் செய்யப்படுகிறது. இந்த வகை அரிசியில் சத்துக்கள் எதுவும் இருக்காது. மாறாக, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் ரசாயனங்களே அதிகம் இடம்பெற்று இருக்கும். அதனால் இதைச் சமைத்துச் சாப்பிடுவதால் எந்தவிதப் பலனும் இல்லை.

கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். உடலுக்குத் தேவையான சத்துகள் இயற்கையாகவே இதில் நிறைந்திருக்கின்றன. இதைச் சாப்பிடுவதால், உடல் வலிமை பெறும்.

மதிய உணவில் அதிக அளவு நீர்ச் சத்துள்ள காய்களை சேர்த்துக்கொள்ளலாம் பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவை நம் உடலுக்கு நலம் பயக்கும் நீர்ச்சத்துள்ள காய்கள்.

எண்ணெயில் செய்யப்படும் பொரியல்களைத் தவிர்க்கலாம். அதிக அளவில் அவியல், கூட்டு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டது செரிமானம் ஆக தேவையான நேரம் கிடைக்கும். அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது.

மைதாதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றுக்கு மதிய வேளையில் `நோ’ சொல்லுங்கள். அதற்குப் பதிலாக கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். இது, செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தைப் போலவே சூப்பும் மதியம் சாப்பிடச் சிறந்தது.

தயிர் சாப்பிடுவது புத்துணர்ச்சி கிடைக்க வழிவகுக்கும். எனவே, தயிரைச் சேர்த்துக்கொள்ளலாம். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், தயிர் ஆகாது என்பவர்கள் நீர்த்த மோரைச் சேர்த்துக்கொள்ளலாம்.