பாகிஸ்தான் அரசு மிக மோசமான நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அதன் டொலர் கையிருப்பு உணவுப் பொருட்களை அடுத்து வரும் சில மாத காலத்துக்கு இறக்குமதி செய்யவே போதுமானதாக இருக்கும் எனவும் பாகிஸ்தான் நிதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போதிய நிதியின்றி பொருளாதார பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானின் 2021 – 22 காலப் பகுதிக்கான வெ ளிநாட்டுக் கடன் தேவை 23.6 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்றும் 2022 – 23 காலப் பகுதியில் இக் கடன் தேவை 28 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்றும் சர்வதேச நாணய சபை மதிப்பிட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வந்த பாகிஸ்தான் இம்ரான்கான் பதவியேற்ற மூன்றாண்டு காலப் பகுதியில் மேலும் சீர்குலைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவிடம் பாகிஸ்தான் நிதியுதவியை எதிர்பார்த்துள்ளது.
இதேசமயம், பெருமளவு வெளிநாட்டுக் கடன் சுமை கொண்ட பத்து நாடுகளில் ஒன்றாக உலக வங்கி பாகிஸ்தானையும் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் மத்திய வங்கியின் அறிக்கையில் அந்நாட்டின் அரச கடன் தொகை 39.9 டிரில்லியன்களாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 14.9 டிரில்லியன் ரூபா கடந்த மூன்றாண்டு இம்ரான்கான் ஆட்சியில் பெறப்பட்ட கடன்களாகும். அந்நாட்டின் தற்போதைய பணவீக்கம் 9 சதவீதமாகும். இது தெற்காசிய நாடுகளில் காணப்படும் உயர்மட்ட பணவீக்கமாகும்.