பயணப் பைக்குள் பெண்ணின் சடலம் – வெளியான தகவல்

சபுகஸ்கந்த – மாபிம என்ற இடத்தில் பயணப் பைக்குள் இருந்த மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த பெண்ணின் சடலம் பயணப் பைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பை தொடர்பில் தனிநபர் ஒருவரிடமிருந்து சபுகஸ்கந்த காவல்நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிவப்பு மற்றும் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் பாயில் சுற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, இறந்தவர் 35-40 வயதுடையவர் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் இதன்போது உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. பாதிக்கப்பட்டவர் சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மஹர பதில் நீதவான் ரமணி சிறிவர்தன நேற்று சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார், பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.