தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல் பிரச்சினையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் இருக்கிறது.
இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைகவசம் அணிவது அவசியமானது. உயிர் காக்கும் கவசமாக செயல்படும் அதனை அணிவதை அசவுகரியமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல் பிரச்சினையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் இருக்கிறது. உண்மையில் தலை கவசத்துக்கும், முடி உதிர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தலைகவசம் அணியும்போது தலை முடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று (ஆக்சிஜன்) தடைபடும். அப்படி காற்று உட்புகுவதற்கு வழி இல்லாமல் போவதால் முடியில் வியர்வை படிந்துவிடும் என்பது வாகன ஓட்டிகளின் வாதமாக இருக்கிறது. ஆனால் அது தவறானது. ஏனெனில் வெளி காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் முடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஆக்சிஜன் ரத்தத்தில் இருந்து கிடைத்துவிடும்.
தலைமுடியை இறுக்கமாக வைத்திருக்கும் பட்சத்தில்தான் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்து முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் இறுக்கமாக தலைபின்னியபடி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது, ஆண்கள் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலரவைக்காமல் ஹெல்மெட் அணிவது போன்ற காரணங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை.
தலைகவசம் எப்போதும் சுத்தமான நிலையில் இருக்குமாறு பராமரிக்க வேண்டியதும் அவசியம். அவற்றில் அழுக்கு படிந்திருக்கும் நிலையில் அப்படியே அணிவதுதான் முடியின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமைகிறது. தலை கவசத்தை மென்மையாக கையாள வேண்டும். காட்டன் துணி அல்லது கர்ச்சிப்பை தலையில் அணிந்து விட்டு அதன் மீது தலைகவசம் பயன்படுத்துவது தலை முடிக்கு பாதுகாப்பானது.