பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று கடந்த புதன் கிழமை இரவு நடந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இவர்கள் இருவரை தவிர வேறு எவரும் கலந்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
பிரதமரின் அறிவிப்புக்கு அமைய அமைச்சர் விமல் வீரவங்ச இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளதுடன் அரசாங்கத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சம்பந்தமான இதன் போது பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் துரிதமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அதன் பின்னர், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இடையில் பேச்சுவார்த்தையை நடத்த பிரதமர் இதன் போது இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5வது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் விமல் வீரவங்ச கலந்துக்கொள்ளவில்லை என்பதுடன் அவரது கட்சியின் பிரதிநிதிகள் மாத்திரம் அதில் கலந்துக்கொண்டனர்.