உரம் தொடர்பில் இலங்கை – சீனா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தியா இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இலங்கையில் இரசாயன உரங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு இயற்கை விவசாய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் இருந்து சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரங்களில் பாக்டீரியா தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து சீன உரத்தை தடை செய்ததுடன், சீன உரத்தை ஏற்றி வந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் சீனா- இலங்கை இடையே மோதல் ஏற்பட்டது.
சீனா பதிலுக்கு இலங்கை மக்கள் வங்கியை தடை செய்தது. இந்த நிலையில் இந்தியாவிடமிருந்து நானோ நைட்ரஜன் திரவ உரங்களை இலங்கை அரசாங்கம் கேட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய அரசு இலங்கைக்கு 100 டடன் நானோ நைட்ரஜன் உரங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய விமானப்படையின் 2 சரக்கு விமானங்கள் மூலம் இந்த உரங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சி-17 ரக 2 விமானங்கள் மூலம் உரங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டது. இலங்கையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவும் இது பயன்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.