சமையல் எரிவாயு கூடுதல் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது மீளவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லிற்றோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், விரைவில் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டு நிலை நீங்கும் எனவும் லிற்றோ நிறுவனத் தலைவர் தேஷர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறைந்தவிலைக்கு எரிவாயு விற்பனை செய்யக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் நிதி அமைச்சின் தலையீட்டுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளது என லிற்றோ எரிவாயு நிறுவனத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் நலின் சமந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு 600 டொலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒமான் டிரேடின் என்னும் நிறுவனத்திடம் 800 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்