கெபத்திகொல்லேவ வலயக்கல்வி பாடசாலைகள் 4 எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் குமுதுனி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கோவிட் தொற்றுக்குள்ளாகியமையினால் 4 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பல பாடசாலைகளில் கோவிட் தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக கெபத்திகொல்லேவ சுகாதார வைத்திய அதிகாரி கே.எம்.சி.மிஹிரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பாடசாலைகளில் ஆசிரியர்களும் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவ்வாறு ஆசிரியர் தொற்றுக்குள்ளாகிய பாடசாலைகளின் வகுப்புகள் மூடப்பட்டு, மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஸஜன் பரிசோதனையில் 26 பேர் கோவிட் தொற்றாளர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குள் கர்ப்பிணி பெண் மற்றும் கைக்குழந்தைகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 250க்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக பாடசாலைகள் திறக்கப்பட்டதையடுத்து பாடசாலை கொத்தணி உருவாகும் சாத்தியம் இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் சிலர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.