நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 29 பேர்மேலும் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 981ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில், பொதுமக்கள் பொதுச் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடக்கின்றனரா என்பதைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைவாக 456 பொலிஸார் இணைந்து மேல் மாகாணத்தில் நேற்று முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது 1,023 பஸ்கள், 167 அதிசொகுசு பஸ்கள், 1,360 வியாபார நிலையங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதற்கமைவாக சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட 353 பஸ்கள், 56 அதிசொகுசு பஸ்கள், 540 வியாபார நிலையங்களுக்கு எதிராகப் பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.