இயற்கை அனர்த்தங்களினால் 106 பேர் பலி!

இந்த வருடத்தில் இதுவரை இயற்கை அனர்த்தங்களினால் மொத்தமாக 106 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த வருடம் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 23,119 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு சேதமடைந்த மொத்த வீடுகள் 29,584 எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் ராஜிகா விக்ரமசிங்க முன்வைத்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பதிலளித்த அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கேகாலை மாவட்டத்தில் உள்ள பத்து பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 546 குடும்பங்களைச் சேர்ந்த 1895 பேர் கடந்த இரண்டு வாரங்களில் சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 104 பேர் நான்கு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கேகாலை மாவட்டத்தில் எட்டு வீடுகள் முழுமையாகவும் 278 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு முதற்கட்டமாக ரூபாய் 10,000 வழங்கப்படும். மாவட்ட செயலகங்களுக்கு தேவையான நிதி தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.