ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்த மாதத்தில் அறிமுகமாகிறது.

ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் இதுபோன்ற சாதனம் உருவாக்கப்படுவதாகவும் ஒப்போ சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ‘பீகாக்’ எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒப்போ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரெனோ 7 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம்.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் ஒப்போ நிறுவனம் மற்றொரு ஸ்மார்ட்போனினை உயர் ரக அம்சங்களுடன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ‘பட்டர்பிளை’ எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.