ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலை நிர்மாணிக்கப்படும் இடத்தில் பணிபுரியும் 45 இந்தியர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர், தொழிற்சாலை நிர்மாணிக்கப்படும் இடத்தில் பணிப்புரியும் 50 தொழிலாளர்களுக்கு ரெபீட் என்டிஜன் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.
இந்த பரிசோதனைகளின் முடிவில் 45 பேருக்கு கோவிட் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் ஹம்பாந்தோட்டை பழைய மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீமெந்து தொழிற்சாலை நிர்மாணிப்பு பணிகளில் 460 சிங்களவர்கள், 320 தமிழர்கள், 480 இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சினோபார்ம் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 480 இந்தியர்களில் 42 பேர் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். எனினும் அவர்களில் எவருக்கும் கோவிட் வைரஸ் தொற்றவில்லை எனவும் தெரியவருகிறது.