வவுனியாவில் வாள்களுடன் சிக்கிய இளைஞர்கள்! வெளியான தகவல்

வவுனியா – கிளிநொச்சியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவங்கள் தொடர்பில் வாள்களுடன் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதில் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 18 பவுண் நகை திருடப்பட்டமை, ஒக்டோபர் மாதம் ஆச்சிபுரம் பகுதியில் 10 பவுண் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டமை, சிதம்பரபுரம் பகுதியில் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை, தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை,

மேலும், இம்மாதம் உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம் 3 பவுண் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டமை மற்றும் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் சங்கிலி அறுக்கப்பட்டமை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் குறித்த நால்வருக்கும் தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 4 வாள்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பொல்லுகள், 15 பவுண் நகை, முகத்தை மறைக்கும் கறுப்பு துணி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.