நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் இன்றைய பிரதமர் – நீதி அமைச்சர் அலிசப்ரி…!!

விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது அவர்கள் கேட்பதை கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறு சிலர் கூறினார்கள் ஆனால் இப்படிப்பட்ட நிலையிலேயே பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் இன்றைய பிரதமர், மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) என நீதி அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது.

புத்த சாசன அமைச்சின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டு முஸ்லிம்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காப்பாற்றியுள்ளார்.

அவர் சகல இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய ஒருவர். மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியை ஏற்றபோது இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பாக வடக்கு மாகாண முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு குறுகிய கால அறிவித்தல் மூலம் வெளியேற்றினார்கள்.

இவ்வாறு வெளியேற்றியவர்களை, பயங்கரவாதத்தை ஒழித்து மீண்டும் தங்களது சொந்த பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழிநடத்தக்கூடிய தலைவராகக் காணப்படுகின்றார்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளில் எல்லா முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் சிறந்த முடிவுகளை எடுத்து தீர்த்து வைத்துள்ளார் என மேலும் தெரிவித்துள்ளார்.