கடந்த 12ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையில் நிறுத்தியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சபாநாயகருக்கு கை சமிக்ஞை வழங்கிய ஜனாதிபதி, வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஒத்திவைக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன், பிற்பகல் 3.30 மணியிலிருந்து 10 நிமிடங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தை ஒத்திவைத்தார்.
பசில் ராஜபக்ஷ மிகவும் சிரமப்பட்டு வரவு செலவுத் திட்டத்தை வாசிப்பதை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானித்ததை அடுத்தே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் அமர்ந்திருந்த ஒரே வரிசையில் பசில் அமர்ந்திருந்த நிலையில், பவித்ரா வலதுப்புறம் அமர்ந்திருந்தமையினாலும் அவர் சமாந்தரமாக அமர்ந்திருந்தமையினாலும் பசிலின் சங்கடத்தை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
சபை ஒத்திவைக்கப்பட்டவுடனேயே ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலர் பசிலை நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ள மருத்துவ ஊழியர்களை உடனடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பசிலை கண்கானித்த மருத்துவர்கள், பசிலுக்கு ஏற்பட்ட களைப்பினால் அவர் இவ்வாறு சிரமப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கமைய பசிலுக்கு சில மாத்திரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தை சிரமப்பட்டு வாசிப்பதை முதலில் அவதானித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், அதனை கண்டுக்கொள்ளவில்லை என தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.