கோவிட் – 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது தடவையாக கோவிட் – 19 தடுப்பூசியானது இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் கோவிட் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்குறிப்பிட்ட நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட் – 19 தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் அத்தடுப்பூசியைப் பெற்ற நாளிலிருந்து ஆகக் குறைந்து ஒரு மாத இடைவெளியின் பின் மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.
நோய் நிலைமையால் அல்லது அதற்கு பெற்றுக் கொண்ட சிகிச்சையினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயுடையவர்கள், உறுப்பு மாற்று (உதாரணமாக சிறுநீரகம், ஈரல், சுவாசப்பை) மற்றும் என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், புற்றுநோயுடையவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள், மண்ணீரல் தொழிற்பாடு குறைந்தவர்கள் அல்லது நோய் நிலையின் நிமித்தம் மண்ணீரல் அகற்றப்பட்டவர்கள், வைத்தியரால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களென பரிந்துரைக்கப்பட்டவர்கள் என 20 வயதிற்கு மேற்குறிப்பிட்ட நோய்நிலைமை உடையவர்கள் மூன்றாவது தடவை மேலதிக தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்னுரிமை உடையவர்கள் ஆவர்.
எனவே, மேற்குறிப்பிட்ட தேவையுடையவர்கள் ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை மற்றும் மருத்துவ அறிக்கையுடன் தமக்கு அருகிலுள்ள குறிப்பிடப்பட்ட வைத்தியசாலைகளில் இந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.