பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் அடுத்த 10 நாட்களுக்கு வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ். 56 வயதான இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு முறை பயணமாக அண்டை நாடான பெல்ஜியமுக்கு சென்றுவிட்டு, நாடு திரும்பிய நிலையில் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். முன்னதாக அவர் நேற்று முன்தினம் பெல்ஜியமில் இருந்து திரும்பிய சில மணி நேரங்களில் அவரது மகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கொரோனா தொற்றுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.