பொலிஸ் அதிகாரி வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஆயுத களஞ்சியத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வெலிபென்ன கல்மத்த, நவ மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து இந்த துப்பாக்கிகளும் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஓய்வுபெற்ற அதிகாரியை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. சந்தேக நபரின் வீட்டில் இருந்து 9 மில்லி மீற்றர் ரிவோல்வர், அதற்கான தோட்டக்களுடன் கூடிய மெகசீன்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 9 மில்லி மீற்றர் துப்பாக்கிக்கான 248 தோட்டக்கள், பல்வேறு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 370 தோட்டக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ரிவோல்வர் 2021 ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது எனவும் இந்த துப்பாக்கி காணாமல் போனதால், அந்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைப்பற்றிய கைக்குண்டு மற்றும் தோட்டக்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு ஒன்று நேற்றிரவு இந்த சந்தேக நபரை கொலை செய்து விட்டு ஆயுதங்களை கைப்பற்ற உள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நடத்திய விசாரணைகளின் பின்னர், ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

75 வயதான இந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகரின் இரண்டு பிள்ளைகள் அமெரிக்காவில் பொறியியலாளர்களாக தொழில் புரிந்து வருகின்றனர்.