தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தோன்றி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் அந்த கொடிய வைரஸ் உலக நாடுகள் மீதான தனது கோரப்பிடியை தளர்த்தவில்லை.
ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. எனினும் தடுப்பூசி எனும் பெரும் ஆயுதம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது.
தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து, இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளது.
அனைத்து நாடுகளை சேர்ந்த பயணிகளும் இஸ்ரேல் வருவதற்கு 14 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை அறிவித்த முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் மந்திரி சபை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் இந்த பயணத்தடை அமலுக்கு வந்தது.
இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்பு தடயங்களை கண்காணிக்க சர்ச்சைக்குரிய தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இது மக்களின் தனியுரிமையை மீறும் செயல் என இஸ்ரேலின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கிடையே அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன.