ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஜாக் டார்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான பராக் அகர்வால் அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியரான பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.-யில் படித்தவர் ஆவார்.
“நிறுவனர்களிடம் இருந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நிறுவனம் தயாராகி விட்டதால், நான் ட்விட்டரில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன். ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பராக் மிகச்சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் இவரின் பணி அபாரமாக இருந்துள்ளது. இது அவர் தலைமை வகிப்பதற்கான நேரம்,” என ஜாக் டார்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பராக் அகர்வால் 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியாக பதவியேற்றார். முன்னதாக இவர் யாஹூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏ.டி. அண்ட் டி லேப்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.