இந்தியாவில் குறைவடையும் கொரோனோ பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி இறுதியில் கொரோனா 2-ம் அலை பரவத் தொடங்கியது.

மே மாதத்தில் பரவல் வேகம் உச்சம் தொட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் குறையத் தொடங்கியது.

கடந்த 6 மாதமாக பாதிப்பு தொடர்ந்து குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்து கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் (நவம்பர்) 3.10 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் 5.20 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இதன்மூலம் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா பாதிப்பு மேலும் 40 சதவீதம் குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,723 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 96 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 177 பேர் உள்பட மேலும் 267 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்தபலி எண்ணிக்கை 4,69,247 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,997, கேரளாவில் 40,132 பேர் அடங்குவர்.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 10,207 பேர் நலம்பெற்றுள்ளனர். இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 28 ஆயிரத்து 506 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 99,023 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 547 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 124 கோடியே 10 லட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 80,98,716 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 11,08,467 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64.24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.