கொரோனா புதியவகை திரிபு வைரஸ் ஒமைக்ரான் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது வேகமாக பரவத் தொடங்கினால் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019 ஆண்ட்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டு ஆண்கள் ஆகியும் வீரியம் குறையாமல் மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலை என ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ள இந்த வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மனித இனம் இதுவரை சந்தித்திராத பெருந்தொற்றாக கொரோனா இருந்து வருகிறது. தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஓரளவுக்கு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தன்னை அடிக்கடி உருமாற்றி அடுத்தடுத்த நிலைக்கு தகவமைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் டெல்டா, டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா இப்போது ஒமைக்ரானாக அவதாரம் எடுத்துள்ளது.
இந்த வைரஸ் இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஒமைக்ரான் குறைந்தபட்சம் 12 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. போட்ஸ்வானா, இத்தாலி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, கனடா இஸ்ரேல் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் விமானங்களுக்கு ஏற்கனவே பல சர்வதேச நாடுகள் பயணத் தடை விதித்துள்ளன. அதேபோல் ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடைவிதித்துள்ளன.
வரும் டிசம்பரில் இருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் மாணவர்களுக்கு எல்லைகளை மீண்டும் திறக்கப்படும் என ஏற்கடவே அறிவித்திருந்த ஆஸ்திரேலியா மீண்டும் அதை திரும்ப பெற்றுள்ளது.
அதேபோல ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஆன்- அரைவல் சோதனையை இந்தியா கட்டாயமாக்கி உள்ளது. இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு சர்வதேச பயணிகளும் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து எதிர்மறையான ஆர்.டி.பி.சிஆர் சோதனை அறிக்கையை காட்டவேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த ஒமைக்ரான் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பது இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை, ஆனால் ஒமைக்ரான் மாறுபாடு சர்வதேச அளவில் பரவக்கூடியது என்று தெரியவந்துள்ளது.
மக்களுக்கு தடுப்பூசிகளை விரைவு படுத்துவதன் மூலம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும். இதுவரை இல்லாத அளவிற்கு ஒமைக்ரான் எண்ணிக்கையிலான ஸ்பைக் பிறழ்வுகளை கொண்டுள்ளது. இந்த வைரஸ் அதிக அளவில் பரவுமேயானால் விளைவுகள் கடுமையாக இருக்கலாம்.
ஆனால் இதுவரை இந்த வைரசால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை ஆனால் பாதிப்புகள் தீவிரமான இருக்கலாம். ஆனால் ஒமைக்கரான் புதிய மாறுபாடு வைரசின் ஒட்டுமொத்த உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த வைரஸ் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
இந்த ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் இந்த வைரஸை கண்டறிந்து அதை உலகிற்கு எச்சரித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அவர்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.