பெண்கள் தங்கள் கைப்பைகளில் எப்போதும், ‘பெப்பர் ஸ்பிரே’, கூர்மையான பென்சில், சேப்டி பின் போன்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், கைப்பை மிகவும் நீளமானதாக இல்லாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.
பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறினாலும், அவர்களது பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகத்தான் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாலும், ஆபத்து காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பெண்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். யாராவது வந்து உதவுவார்கள் என்று காத்திருக்காமல், தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஆபத்துகளைத் தவிர்க்கலாம். அதற்கான சில வழிகள்:
நடந்து செல்லும்போது, சந்தேகிக்கும்படியான நபர் அருகில் வருவதை உணர்ந்தால், நடையை வேகப்படுத்தி மக்கள் அதிகமுள்ள பகுதிக்குச் செல்ல வேண்டும்.
உடனடியாக ஆள் நடமாட்டமுள்ள பகுதிக்குச் செல்ல முடியாவிட்டாலும், அருகில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்குள் சென்று விடலாம்.
மொபைல் போனை ஆபத்து நேரத்தில் சரியாகப் பயன்படுத்துவதற்குத் தெரிந்திருக்க வேண்டும். காவல்துறையின் உதவியை நாடுவதற்காக எப்போதும் ‘100’ என்ற அவசர உதவி எண்ணைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
தெரியாத நபர்களால், பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்தால், தயங்காமல் அருகில் இருக்கும் நம்பகமான நபர்களிடம் உதவி கோரலாம். அதற்கு முன்பு, எதிராளியிடம் அஞ்சாமல், அதிக சப்தத்துடன் பேசத் தொடங்க வேண்டும். இதன் மூலம் ஆபத்தை எளிதில் மற்றவர்களுக்கு உணர்த்த முடியும். தெரியாத நபர்களால் ஆபத்து ஏற்படும்போது, தற்காத்துக்கொள்வதற்கு அவர்கள் அசந்திருக்கும் சந்தர்ப்பத்தில் தாக்க வேண்டும்.
தற்காப்புக் கலை கற்றவர்கள் அதைக் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ளலாம். அது தெரியாதவர்கள் எதிராளியின் கண், முகம், கை, மார்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் உங்களின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் தாக்குவதற்கு முற்பட வேண்டும். இதன் மூலம் அவர் நிலைத் தடுமாறும்போது, அங்கிருந்து நகர்ந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லலாம். தற்போது காவல்துறை, பெண்களின் பாதுகாப்புக்காகவே ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றைத்தவிர, பெண்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான சில முறைகளும் உள்ளன. அவற்றில் சில:
பெண்கள் தங்கள் கைப்பைகளில் எப்போதும், ‘பெப்பர் ஸ்பிரே’, கூர்மையான பென்சில், சேப்டி பின் போன்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், கைப்பை மிகவும் நீளமானதாக இல்லாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.
சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிடும்போது, நீங்கள் இருக்கும் பகுதியை அனைவருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தும் வகையில் பதிவிடாமல், குறைந்தபட்சம் 30 நிமிடமாவது தாமதமாகப் பதிவிடுவது சிறந்தது.
பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் கடைக்காரரிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்கும்போதும், மொபைல் போன் ரீசார்ஜ் செய்வதற்காக எண் விவரங்களைத் தெரிவிக்கும்போதும் கவனத்துடன் தெரியப்படுத்த வேண்டும்.