பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையேதான் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு பிரதமர் இம்ரான்கான் திடீரென்று தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வதை தடை செய்துள்ளதாகவும், அவரும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்டமன்ற உறுப்பினர் ரியாய் பத்யானா கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டுக்கு சென்றது மற்றும் அவரது பயணம் குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.
அப்போது தான் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாத போது அமைச்சர்களும் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது தகவல்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி பேசும்போது அமைச்சர்களை விட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செனட்டர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கின்றனர் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் எம்.எல்.ஏ.க்கள் (தேசிய சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் செனட்டர்கள் கூட வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கூடாது. அரசாங்க விவகாரங்கள்தான் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்’ என்றார்.
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையேதான் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.