உடற்பயிற்சி செய்த பிறகு தண்ணீர் பருகுவது உடல் ஆற்றலை அதிகரிக்கச்செய்யும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகலாம். கிரீன் டீயும் ருசிக்கலாம்.
காலையில் எழும்போதே ஒருவித சோர்வு சிலரிடம் எட்டிப்பார்க்கும். எந்த அளவிற்கு காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குகிறோமோ அதனை பொறுத்து அந்த நாளின் செயல்பாடுகள் அமையும். காலையில் எழுந்ததும் ஒருசில விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் பலருடைய கைகள் செல்போனைத்தான் தேடும். படுக்கையில் இருந்தபடியே செல்போனில் சிறிது நேரம் உலாவிவிட்டுத்தான் எழுந்திருக்கவே செய்வார்கள். அப்படி செல்போனை பார்க்கும்போது கண்களில் ஒருவித சோர்வு எட்டிப்பார்ப்பதை உணரலாம். அது காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு இடையூறாக அமைந்துவிடும்.
காலையில் செல்போன் பார்ப்பதற்கு பதிலாக நாளிதழ்கள் வாசிக்கலாம். புத்தகங்கள் படிக்கலாம். அவை அன்றாட நிலவரங்களை அறிந்து கொள்ளவும், புது தகவல்களை தெரிந்து கொள்ளவும் உதவும். மனமும் அமைதி அடையும்.
காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் தவறாமல் பின்பற்றுவது நல்லது. உடற்பயிற்சிக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும். அது எந்தவிதமான உடற்பயிற்சியாகவும் அமையலாம். அது உடல் தசைகளை இலகுவாக்கும். மனதையும் ரிலாக்ஸ்ஆக வைத்திருக்க உதவும்.
உடற்பயிற்சி செய்த பிறகு தண்ணீர் பருகுவது உடல் ஆற்றலை அதிகரிக்கச்செய்யும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகலாம். கிரீன் டீயும் ருசிக்கலாம்.
குளிப்பதற்கு முன்பாக அன்றைய நாளில் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டுவிட வேண்டும். எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும்? எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை திட்டமிட்டுவிட்டால் தொய்வின்றி காரியங்களை செய்துவிடலாம். தேவையற்ற மன குழப்பங்களை தவிர்த்துவிடலாம்.