கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில்தான், சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றினார் என்று புராணங்கள் சொல்கின்றன. இதனால் கார்த்திகை பவுர்ணமி சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அது போலவே கார்த்திகை மாத அமாவாசை தினமும் சிறப்புக்குரிய ஒரு நாள்தான். ஏனெனில் இந்த நாளில்தான், திருப்பாற்கடலில் இருந்து லட்சுமி தேவி வெளிப்பட்டாள் என்கிறார்கள். இந்த தினத்தில் லட்சுமியோடு, நம்முடைய முன்னோர்களையும் வழிபாடு செய்து வந்தால், சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
வீட்டின் எல்லா அழகான பகுதிகளிலும் லட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. எனவே கார்த்திகை அமாவாசை அன்று, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் ஆகியோரிடம் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் லட்சுமி இருக்கும் இடங்கள்தான். எனவே நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் அழகாக வைத்திருந்தாலே அன்னை மகாலட்சுமியின் அருளோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
இந்த லட்சுமி வழிபாட்டோடு, கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு, மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு, கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் கிடைக்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். கார்த்திகை அமாவாசை நாளில் விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும். இந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.