இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு!

டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆகிய 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆனது. இதேபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரி ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் நேற்று வரை ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக இருந்து

இந்நிலையில், தன்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், “டெல்லியில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தான்சானியாவில் இருந்து திரும்பியவர். கொரோனா தொற்றால் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் ” என்றார்