நாட்டில் வலம் வரும் போலி சி.ஐ.டி அதிகாரி!

கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி, உப்போடை புறநகர் பகுதியில் நகைத் திருட்டுச் சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இந்தத் திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபரொருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக சந்தே நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர்.

அதன்போது சந்தேகநபர் வீட்டில் இல்லாமையால் மீண்டும் வருவதாகக் கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில், அதே வீட்டுக்குச் சில நிமிடத்துக்குள் சி.ஐ.டி எனப் பொய் கூறி மற்றுமொரு போலி நபர் சென்றுள்ளார்.

அந்நபர், 10 ஆயிரம் ரூபாய் கப்பமாக தந்தால் குறித்த பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக வீட்டினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பம் கோரல் தொடர்பில் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் நேற்று முன்தினம்இரவு சென்ற பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதன்போது கைதான சந்தேகநபர் வைத்திருந்த ஓர் அடையாள அட்டையில் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு, கல்விப் பணிப்பாளர் எனப் பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.