ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டால் உடனே கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம் என்று செய்திகளில் பார்த்திருக்க முடியும். இது அனைத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டருக்கும் பொருந்தும். ஏனெனில், உலகில் உள்ள அனைத்து விமானம் மற்றும் ஹெலிகாப்டரிலும், இந்த கருப்பு பெட்டி நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
கருப்பு பெட்டி என்றால் என்ன?
கருப்பு பெட்டி என்று பெயர் பெற்ற இந்த பொருள் உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். அதற்கு காரணம், விமானம், ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகும் போது, பெரும்பாலும் தீ பற்றி எரிகிறது.
அதில், முழுவதும் கருப்பாகவே காணப்படும். இந்த சூழலில், இந்த பெட்டியும் கருப்பாக இருந்தால் தேடுவது சிரமமாக இருக்கும் என்று இது ஆரஞ்சு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கருப்பு பெட்டி 1950-க்கு முன் விமானங்களில் கிடையாது.
விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் விபத்தை சந்திக்கையில், அதன் காரணம் பற்றி அறிந்துக் கொள்ள முடியாததால் இந்த கருப்பு பெட்டி உருவாக்கப்பட்டது. முதலில், ரெக்கார்ட் செய்வது ஒரு உலோக துண்டாக மட்டுமே இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மெமரி சிப்புகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பெரும்பாலான விமானங்களில் இரண்டு கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட வேண்டும். ஒன்று காக்பிட் குரல் ரெக்கார்டர் மற்றொன்று விமான தரவு ரெக்கார்டர். அவை ஒரு ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தை பற்றிய தகவல்களைப் பதிவு செய்கிறது.
அது மட்டுமின்றி இந்த தகவல்களை கொண்டு மற்ற விமானங்களில் அதை சரி செய்யவும் முடியும். கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட தகவல்களை இந்த கருப்பு பெட்டி சேமிக்கிறது. இதனால், இந்த கருப்பு பெட்டி ஸ்டீல் அல்லது டைட்டானியத்தால் உருவாக்கப்படுகிறது.
எந்த காலநிலையிலும் செயல்பட முடியும். அதேபோல் கருப்பு பெட்டி விமானத்தின் வால்பகுதியில் தான் அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், வால்பகுதி எப்போதும் விபத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
விமானம் தண்ணீருக்கடியில் விழுந்தால், அதன் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க, அதில் அல்டரா சவுண்ட் சிக்னல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிக்னலை 30 நாட்கள் வரை தேடுவார்கள். கருப்பு பெட்டி உடனே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் தரவுகள் கிடைக்க 10 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம்.
விபத்திற்கு முன்னதாக விமானிகளுக்கு இடையிலான உரையாடல் பதிவுகள், தடயங்கள் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். விமானம் விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது என்பதை விமானிகள் எப்படி புரிந்துக் கொள்கின்றனர்.
அவர்கள், அதற்கு என்னென்ன நடைமுறைகள் பற்றி பேசுகின்றனர் என்பதை பற்றி அந்த கருப்பு பெட்டியில் இருந்து கண்டறியப்பட வேண்டும். மேலும், விமான நிலையத்தில் உள்ள தகவல்கள், மற்றும் விமானம் தரையில் தொட்ட வேகம், ஓடுபாதையில் செல்லும்போது உள்ள வேகம் பற்றி இதில் கண்டிறியப்படுகிறது.
ஒவ்வொரு விமான விபத்தும், முறையாக விசாரிக்க காரணம் அடுத்த விமான விபத்து நடக்க கூடாது என்பதை அடிப்படையாக கொண்டே நடத்தப்படுகிறது.