பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் நாமல் ராஜபச்க நாடாளுமன்றில் நேற்று இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உரைக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்த நடவடிக்கைகளை நீதி அமைச்சர் அலி சப்ரி முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு உதவியதில்லை. உதவப்போவதும் இல்லை. ஆகையினால் அரசியல் கைதிகளின் விடயத்தில் நாம் அரசியல்ரீதியான வாக்குறுதிகளை வழங்கப்போவதில்லை.
இது தொடர்பில் நாம் முன்பும் எந்தவொரு வாக்குறுதிகளையும் வழங்கவும் இல்லை” என குறிப்பிட்டார். இந்நாட்டு பிரஜைகள் தொடர்பில் அரசாங்கம் என்கிற வகையில் எமக்குப் பொறுப்புகள் இருக்கின்றன.
எனவே அதனை நாம் நிறைவேற்றுவோம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.