பிரியந்தவின் பிள்ளைகளுக்கு உதவும் சஜித்

பிரியந்த குமாரவின் பிள்ளைகளுக்கு சமூக பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சகோதரத்துவம் நீடிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரியந்தவை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய அந்நாட்டின் பிரதமர் நேரடியாகவும் உடனடியாகவும் தலையிட்டமைக்கு எதிர்கட்சித் தலைவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

அனைத்து மதங்களும் மனிதாபிமானத்தையும், நல்லிணக்கத்தையும், ஒருவரையொருவர் மதித்து, அன்பையும் போதிக்கின்றன என்றும், சில தரப்பினரின் அடாவடித்தனங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது தடவையாக நேற்று விஜயம் செய்தார்.

பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் கல்விக்காக தலா ஒரு மில்லியன் ரூபா நிதியுதவியை எதிர்க்கட்சித் தலைவர் வழங்கியதுடன், ஒரு குழந்தையின் கல்விக்காக மடிக்கணினி கணனியையும் வழங்கினார்.

பிரியந்த குமாரவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், நியாயமான விசாரணையின் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் கல்வியை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்தார்.