விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 74 வயது மூதாட்டி

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது.

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் ‌ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது.

லாரா ஷெப்பர்ட்டின் தந்தையான ஆலன் ஷெப்பர்ட் கடந்த 1961-ம் ஆண்டு மே 5-ந் தேதி புளோரிடா மாகாணத்தில் இருந்து மெர்குரி விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்து, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புளூ ஆரிஜின் நிறுவனத்துக்கு சொந்தமான வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ஆலன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேருடன் நியூ ஷெப்பர்ட் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. இந்த பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. நியூ ஷெப்பர்ட் விண்கலம் 100 கிலோமீட்டர் உயரம் வரை பயணித்தது. அதன் பின்னர் அந்த விண்கலம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.