புகழ்பெற்ற ஸ்ரீரங்க ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை 7:00 மணி முதல் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் திகதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

மறுநாள் 4ம் திகதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று 13ம் திகதி நம்பெருமாள், மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று(டிச.,14) அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, பரமபத வாசலில் அருள்பாலித்தார்.

பின்னர் அதிகாலை 4:45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 24ம் திகதி வரை ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும்.

19 வருடங்களுக்கு ஒரு முறை

மேலும், இவ்வருடம் தை பிரம்மோற்சவம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் என்பதால் சொர்க்க வாசல் திறப்பு முன்கூட்டியே கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. 19 வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு நடைபெறுவது வழக்கமாகும்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு: கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சொர்க்க வாசல் திறப்பு அன்று, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இன்று, திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.