இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு!

டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், மேலும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.

இந்நிலையில், டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.டெல்லியில் ஏற்கனவே 2 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் முதல்முதலில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்குள்ளான 37 வயதானவர் குணமடைந்து லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

இதன்மூலம், இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:-

டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் புதிதாக நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால், மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதில், சிகிச்சையில் இருந்த ஒருவர் உடல் நலம்தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தற்போது, டெல்லியில் 35 கொரோனா நோயாளிகள் மற்றும் 3 சந்தேகத்திற்கிடமான நபர்கள் எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.