சமூகத்துக்குள் தலைதூக்கி இருக்கின்ற வன்முறைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பரந்தன் சிவபுரம் பகுதியில் இன்று (15)நடைபெற்ற பொது மண்டபத்திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது தொடர்பாக எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலே ஆயுத வழியில் வன்முறைகளுக்கு ஊடாக நாங்கள் பெரும் அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து இருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகளுக்கு அழிவுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை.
ஆரம்பத்தில் நாங்கள் ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள் தான் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்பதால் அரசியல் நீரோட்டத்தில் இறங்கி எமது பணிகளைச் செய்து வருகின்றோம். இப்போது நீங்கள் எங்களுடன் அணிதிரள்வீர் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் ஒரு காலகட்டத்தில் அதாவது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த ஆயுதப் போராட்டம் திசை திரும்பி வன்முறையை நோக்கி நகர்ந்தது. அதனால் பலவீனப்பட்டுப் போய்விட இதற்குப் பொருத்தமான தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தம் நமக்குக் கிட்டியது.
அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றோம். அதாவது நாங்கள் முட்டையைச் சாப்பிட வேண்டுமாக இருந்தால் முட்டையை உடைத்து அதன் உள்ளே இருக்கின்ற உள்ளீட்டைச் சாப்பிட வேண்டும்.
மாறாக முட்டையை உடைத்து தரையில் ஊற்ற முடியாது. ஆகவே கடந்த கால போராட்டம் என்பது முட்டையை உடைத்து தரையில் வீசுவது போல இருந்துள்ளது. சமூகத்துக்குள் தலைதூக்கி இருக்கின்ற வன்முறைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.
அந்த வகையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் நான் பொலிஸாரிடம் தெரிவித்து நிற்கின்றேன். குறித்த இடத்தில் ஒரு பொலிஸ் காவலரன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவத்தினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நான் கேட்கவுள்ளேன். கடந்த காலங்களில் வன்முறைகள் தலைவிரித்தால் எமது மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு வாழ்ந்தனர். இனிமேல் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தேவை இல்லை.
நாங்கள் ஒரு அரசியல் நகர்வு ஊடாக எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டு கொள்ளலாம். அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அமைச்சரவை மட்டத்திலேயே கலந்துரையாடி அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.