சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

சென்னையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரியளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் , அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தொடர்ந்து பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பெரும்பாலான பெண்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் , 8 பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.

மேலும் அவர்களின் நிலை குறித்து மற்ற பெண் தொழிலாளர்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக பெண்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், சென்னை-பெங்களூரு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.