இலங்கையில் மனிதக் கடத்தலும் மனித வியாபாரமும்: ஒரு தினத்தில் 10 ஆண்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறும் திலினி!
வருடமொன்றுக்கு 6 இலட்சம் முதல் 8 இலட்சம் வரையான மனித வியாபார சம்பவங்கள் நாடுகளின் எல்லைக்குள் பதிவாகுவதாக தெரிவிக்கும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு, இதனால் 80 வீதம் பாதிக்கப்படுவது பெண்கள் என்றும் அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களில் 70 சத வீதமானவர்கள் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் போதைப்பொருள் கடத்தலுக்காகவும் மனித விற்பனைகள் இடம்பெறுவதாகவும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு கூறுகிறது.
வீ.பிரியதர்சன் ‘எனக்கு அனோமா எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அவர் எனக்கு சிங்கப்பூரில் இலத்திரனியல் நிறுவனமொன்றில் தொழில்பெற்றுத் தருவதாக தெரிவித்து தனது கணவன் என அறிமுகப்படுத்திய நபருடன் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். நான் அங்கு புறப்பட்ட பின்னர்தான் உணர்ந்து கொண்டேன் என்னுடைய நண்பியான அனோமா என்னை விபசாரத்துக்கு விற்றுவிட்டதை பின்னர் அறிந்து கொண்டேன்” என்கிறார் 26 வயதுடைய ஐந்து பெண் பிள்ளைகளைக் கொண்ட மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த திலினி.
நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் மனித வியாபாரங்களும் மனிதக் கடத்தல்களும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் இதனால் பல்வேறு மனித சுரண்டல்களும் மனித உயிரிழப்புக்களும் இடம்பெறுவதாக புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பினால் வெளியிடப்படும் தரவுகள் வெளிக்காட்டுகின்றன. மனித வியாபாரங்களும் மனிதக்கடத்தல்களும் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமல் அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தும் நடக்க வாய்ப்புக்கள் உள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து மக்களிடத்தில் போதிய தெளிவு காணப்பட வேண்டியது முக்கியமாகும். “நான் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்குள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்க வைக்கப்பட்டேன். எனது கடவுச்சீட்டு அனோமாவிடம் இருப்பதால் அவள் சொல்வதையெல்லாம் செய்ய வேணடிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டேன்.
அதன் பின்னர் நான் ஒருநாளைக்கு 10 ஆண்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானேன்” என்கிறார் திலினி. உலகளாவிய ரீதியில் இலங்கை மனித வியாபாரத்துக்கு உட்படும் முக்கிய ஆரம்ப இடமாக பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து ஆண்களும் பெண்களும் வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாகவும் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கட்டட நிர்மாணப் பணிகளுக்காகவும் சுற்றுலாத்துறை, அழகு நிலையங்கள் மற்றும் வேறு பல தொழில்கள் நிமித்தம் புலம்பெயர்ந்து தொழில் புரிந்து வருகின்றனர்.
இதன்போது சிலர் சுரண்டல்கள் மற்றும் அடிமைத்தனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலவந்தமாக பாலியல் தொழிலுக்குள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனித விற்பனை மற்றும் ஆட்கடத்தல் என்றால் என்ன என்று பார்க்கும்போது நவீன அடிமைத்தனம் என பொதுவாக அழைக்கப்படுகின்ற மனித விற்பனை ஒரு நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் இடம்பெறக் கூடும். மனித வியாபாரமானது பன்முங்கொண்ட குற்றமாகவும் ஏனைய பல குற்றங்களில் இருந்து வேறுபட்டதாகவும் காணப்படுகின்றது.
இது பெரும்பாலும் செயல், வழிமுறை, நோக்கம் ஆகிய வடிவங்களில் தொடர்புபட்டு காணப்படுகின்றன. ஆட்கடத்தல் என்பது தரை, கடல், ஆகாய வழி மூலம் இடம்பெறுகின்றன. கடந்த காலங்களில் அதிகரித்து வரும் ஒரு குற்றச் செயலாக ஆட்கடத்தல் காணப்படுகிறது.
பொதுவாக ஆட்கடத்தலுக்குள்ளாகும் நபரின் அல்லது நபர்களின் சம்மதத்துடனேயே இது இடம்பெறுவதோடு கடத்தப்படுபவர் கடத்தல்காரரின் சேவைக்கு கட்டணத்தை உடன் செலுத்துகின்றார். ஆட்கடத்தப்படுவதற்கான பொதுவான காரணங்களாக வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைமை, தனிநபரின் அல்லது குடும்பத்தின் வாழ்க்கை மேம்பாடு, அடக்குமுறை அல்லது முரண்பாடுகளில் இருந்து தப்பித்தல் போன்றவற்றைக் கொள்ளலாம். “குடும்ப பொருளாதார சூழ்நிலையால் புலம்பெயர்ந்து தொழில் செய்ய தீர்மானிருந்த நிலையில், குவைத்துக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழிலுக்குச் சென்று 3 வருடங்களின் பின்னர் நாடு திரும்பி மீண்டும் தொழிலுக்காக வெளிநாடு செல்லத் தீர்மானித்தேன்.
திலினி.கொண்டேன். அங்கு சென்ற நிலையில் வேலை கிடைக்கும் வரையில் அங்குள்ள கட்டடமொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன்” என்கிறார் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுவர்ணலதா என்கின்ற பெண். மனிதக் கடத்தலுக்கும் மனித வியாபாரத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆட்கடத்தல் என்பது பொதுவாக சட்டரீதியற்ற முறையில் நாட்டைக் கடந்து செல்ல உதவி புரிதலாகும் . எனவே மனிதக் கடத்தலானது சர்வதேச ரீதியில் நாடுகளைக் கடத்தலை முக்கியமாகக் கொண்டது.
இது பிரதானமாக ஒரு அரசின் சட்டத்துக்கு எதிராக வழிகாட்டுவதாக அமையும். மனித வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் முக்கிய நோக்கமானது சுரண்டலாகும். மனித வியாபாரத்துக்பு உட்பட்டநபர் ஏமாற்றப்படுவார். மனித வியாபாரம் என்பது ஒரு தொடர் செயற்பாடு, இதன் இறுதியில் பாதிக்கப்பட்டவர் சுரண்டலுக்கு உட்படுவார். ஆட்கடத்தல் என்பது அவரின் சம்மதத்துடனேயே இடம்பெறும். எவ்வாறெனினும் மனிதக் கடத்தலுக்குட்படும் பெரும்பாலான நபர்களின் மனித உரிமைகள் பாதிப்புக்கு உட்படுத்தப்படும்.
நடைமுறையில் மனித வியாபாரம் மற்றும் மனிதக் கடத்தலுக்கு இடையிலான வேறுபாடுகள் தெளிவாக காணப்படுவதோடு ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுக்காணப்படும். “ பொருளாதார நிலைமை காரணமாக நான் 17 வயதில் படிப்பை நிறுத்தி விட்டு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு இணைந்தேன்.
அங்கு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவனுடன் வாழ்ந்து வந்தேன். இந்தநிலையில், அவன் எனக்கு வேறு ஒரு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறினார். பின்னர் ஹோட்டல் ஒன்றில் நானும் அவனும் வேலைக்கு சேர்ந்தோம். 3 நாட்களின் பின் ஆண் நண்பர் அங்கிருந்து காணாமல் போய்விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹோட்டல் உரிமையாளர் என்னை பாலியலில் ஈடுபட வற்புறுத்தினார். அதன் பின்பே என்னை எனது ஆண் நண்பன் ஹோட்டலுக்கு பாலியல் தொழிலுக்காக விற்றமை தெரிய வந்தது” என கூறுகிறார் சேபாலி. வருடமொன்றுக்கு 6 இலட்சம் முதல் 8 இலட்சம் வரையான மனித வியாபார சம்பவங்கள் நாடுகளின் எல்லைக்குள் பதிவாகுவதாக தெரிவிக்கும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு, இதனால் 80 வீதம் பாதிக்கப்படுவது பெண்கள் என்றும் அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களில் 70 சத வீதமானவர்கள் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன் போதைப்பொருள் கடத்தலுக்காகவும் மனித விற்பனைகள் இடம்பெறுவதாகவும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு கூறுகிறது. “ எனது குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி, பணப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வெளிநாட்டுக்கு செல்வது தான் சிறந்த வழி என நினைத்தேன். எனது கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் அயலவர்களின் வெற்றியை பார்த்ததிலிருந்து நானும் இதனை பரீட்சித்துப் பார்ப்பதற்கு எண்ணினேன்.
இதையடுத்து ஒரு முகவர் ஊடாக கனடா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு 3200 அமெரிக்க டொலர் பணத்தையும் கடன்வாங்கி திரட்டிக்கொண்டு இலங்கையில் இருந்து மும்பை செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கு வந்த முகவர் அந்த பணத்தை வாங்கிவிட்டு என்னை மும்பை நோக்கி அனுப்பி வைத்தார், அங்கிருந்து நேபாளத்துக்கான விமானத்தில் மாறி நேபாளம் சென்றேன். அங்கு என்னை மற்றுமொரு நபர் பொறுப்பெடுத்தார். அங்கிருந்து ஹோட்டலுக்கு அழைத்துச்சென்ற அவர், எனது கடவுச்சீட்டை வாங்கிச்சென்றார்.
அத்துடன் எஞ்சிய 4,500 அமெரிக்க டெலார் பணத்தையும் செலுத்துமாறும் தெரிவித்தார். பின்னர் அந்த நபர் எனது கடவுச்சீட்டை ஹோட்டலில் கொடுத்து விட்டு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் நான் எனது நிலையை புரிந்துகொண்டு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் உதவியை நாடி தற்போது நாடு திரும்பியுள்ளேன் என்கிறார் இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிதா.
கடந்த 2018 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்கு முறையற்ற வகையில் புலம்பெயர முயன்றவர்களில் குறைந்தபட்சம் 2, 299 பேர் மத்திய தரைக்கடலில் மரணித்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். தரை வழிப்பயணத்தின்போது அநேகமானவர்கள் தங்களுடைய பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் மூச்சுத் திணறலுக்குள்ளாகி மரணமடைந்து அல்லது நச்சு வாயுக்களை சுவாசித்து சுகயீனமுற்றுள்ளதாக புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் முறையற்ற வகையில் புலம்பெயர முயன்றவர்கள் அதிக எண்ணிக்கையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு, 2021 ஆம் ஆண்டில் 4,470 பேரும் 2020 இல் 4,236 பேரும் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் சட்டம் அதாவது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டம் அனுமதிப்பத்திரம் இல்லாத முகவர் நிலையங்களினால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பதை தடைசெய்துள்ளது.
அத்துடன் பதிவு செய்து கொண்டுள்ள ஆட்சேர்ப்பு முகவர்களின் பெயர்களை www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் இருந்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் . இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு எவரேனும் ஆட்சேர்ப்பு முகவர் அனுமதிப்பத்திரம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவரா என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்நிலையில், இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்குமான ஒழுங்குறுத்தல் அதிகாரமுடைய நிறுவனமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காணப்படுவதோடு புலம்பெயர் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல், பயிற்றுவித்தல், பதிவு செய்தல், புறப்படுதல்,நலன்புரி மற்றும் நாடு திரும்புதல் ஆகிய விடயங்கள் தொடர்பான சட்டங்களை நிர்ணயிக்கின்றது. தொழிலுக்காக புலம்பெயரும் அனைவரும் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்து கொள்ளத் தவறுதல் தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதுடன் புலம்பெயர் செயன்முறை முழுவதிலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் புலம்பெயர் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் வழங்கும் பெருமளவிலான நன்மைகள் பதிவு செய்து கொள்ளாத புலம்பெயர் ஊழியர்களுக்கு உரித்தாவதில்லை. பதிவு ஒரே தொழில் தருனருடன் இரண்டு வருட காலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாகும். நீங்கள் உங்கள் வெளிநாட்டு தொழில் ஒப்பந்ததத்தை மேலும் நீடிக்க விரும்பினால் அதன் செல்லுபடியாகும் காலம் நிறைவடைவதற்கு முன்னர் சென்றடைந்த நாட்டில் இலங்கை தூதுதரகத்துக்கு சம்பந்தப்பட்ட கட்டணத்தை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவின் ஊடாக ஒப்பந்தம் மீறப்படுதல், மரணம், திடீர் விபத்துக்கள், காயங்கள் போன்ற பல்வேறு நிலைமைகளில் உங்களுக்கு காப்புறுதி கிடைக்கிறது. காப்புறுதி கோரும் விடயமானது கால வரையறைகளுக்கும் சிற்சில நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டதாகும்.
மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாராத்தில் இருந்து நீங்களும் பாதுகாப்பாக இருந்து, எவராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை உரியவர்களுக்கு அறிவித்து அவர்களையும் காப்பாற்றுங்கள் ! இதேவேளை, புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு IOM இன் இலக்கங்களான 0766588688/0774410086 ஆகியவை மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆட்கடத்தல், மனிதவியாபார தடுப்புப்பிரிவின் இலக்கமான 0112392917 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இலக்கமான 1929 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் பொலிஸ்துறை – பெண்கள் சிறுவர்களுக்கான அமைச்சின் இலக்கமான 011 -2444444என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் பொலிஸ் துறை அவசர அழைப்பு இலக்கமான 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் பொலிஸ்துறை தலைமையக இலக்கமான 011 -2421111 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் – மனித வியாபார தடுப்புப் பிரிவின் இலக்கமான 011 -2884701 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கும் போது உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை பெண்கள் பிரிவின் இலக்கமான 0112187272 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பு கொண்டு தெளிவு படுத்தல்களை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.