பெற்றோர் சம்மதத்துடன் ஆண்கள் இருவர் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
ஐதராபாத் புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அபய் டாங்கே (34) மற்றும் சுப்ரியோ சக்ரவர்த்தி (31) ஆகிய இரு ஆண்களும் இவ்வாறு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இவர்களது திருமணம் நேற்று முன்தினம் இடம்பெற்றாதாக கூறப்படுகின்றது. விழாவில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்.
இவர்களின் திருமண விழாவில் 60 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தினர். சுப்ரியோவும் அபயும் தங்களின் எட்டு ஆண்டு கால நட்புக்கு பிறகு இந்த திருமணத்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பஞ்சாப்பை சேர்ந்த அபய், ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர். சுப்ரியோ மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் .
இதனால் இவர்களது திருமணம் மேற்குவங்காளம் மற்றும் பஞ்சாபி பாரம்பரியத்துடன் நடைபெற்றது. அதேவேளை திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன, இதில் எல்ஜிபிடீ (LGBT) சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
சுப்ரியோவின் பெற்றோர் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவளிக்கவில்லை என்றும்,எனினும் பின்னர் அவர்களது உறவை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் இத்திருமணம் நடதேறியதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.