புதிதாக தொழிலை தொடங்கும் நபர் உயர்வை பற்றி கனவு காண்பவராகவும், அதனை தன்னை பின்பற்றுபவர்களிடம் விவரிப்பவராகவும் இருக்க வேண்டும்.
ஒருவர் ஒரு தொழிலை தொடங்குவது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியமானது அதனை திறம்பட நிர்வகிப்பது. தொழிலை பொறுத்தவரை, தனி நபரின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக அதனை சார்ந்து உள்ள ஒட்டுமொத்த பேரின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால், அதில் தனி நபரின் நலனும் அடங்கி விடும். இதனால் பொது அமைப்புகளின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கை உள்ளிட்ட கோட்பாடுகள் உறுதி செய்யப்படுகிறது. இவற்றை எதற்காகவும் மீறி செயல்படக்கூடாது. தொழிலில் பாரபட்சமின்றி நியாயமாக செயல்பட வேண்டும். அதன் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு தொழிலின் நீண்டகால வெற்றிக்கு வலிமையான மதிப்பீடு முக்கியம் ஆகும். ஒருவர் குழந்தை பருவத்தில் மிகவும் அன்பு காட்டி வளர்க்கப்பட்டால், அவரிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஏனென்றால், பாதுகாப்பான கட்டமைப்புக்குள் இருக்கிறோம் என்ற உணர்வு அவருக்குள் இருந்து கொண்டே இருக்கும். தொழிலில் வெற்றிபெற தன்னம்பிக்கை அவசியம் ஆகும்.
புதிதாக தொழிலை தொடங்கும் நபர் உயர்வை பற்றி கனவு காண்பவராகவும், அதனை தன்னை பின்பற்றுபவர்களிடம் விவரிப்பவராகவும் இருக்க வேண்டும். கனவை விவரித்தால் மட்டும் போதாது, அதனை அடைய மற்றவர்களை தூண்டுபவராகவும் இருக்க வேண்டும். தொழிலில் உடன் பணிபுரிபவர்களிடம், குடும்ப உறுப்பினர்களை போல பழக வேண்டும். அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் வைக்க வேண்டும். ஒருவருடைய கருத்தை மற்றொருவர் மறுக்கக்கூடும். ஒரு கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டால், மிகச்சிறந்த கருத்துகள் கிடைக்காமல் போய்விடும். தொழில் அனைத்து முடிவுகளையும் பொது இசைவோடு எடுத்தால் நன்றாக இருக்கும். ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
தொழிலில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். இதன்மூலம் எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நம்மால் சாதிக்க முடியும். எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை நம்மால் உலகுக்கு நிரூபிக்க வேண்டும். தன்னம்பிக்கையையும், நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும்போது வெற்றி பெறலாம். தொழிலில் மூல ஆதாரங்களை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும். எந்த தொழில் தொடங்கினாலும், அதில் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள், புதிய தொழில் தொடங்குபவர்களை மூளைச்சலவை செய்து தொழிலை தொடங்கவிடாமல் செய்து விடுவார்கள். இதுபோன்ற மூளைச்சலவைகளை காதில் வாங்காமல், அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தவறு செய்யும் போது அதனை சரிசெய்யும் அறிவையும், தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் குணத்தையும் தொழில் தொடங்குபவர் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தரத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள கூடாது. குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்க வேண்டும். பொருள் தரமானதாக இல்லை என்றால் மக்கள் அதனை ஒதுக்கி விடுவார்கள். தொழிலில் எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். தொழிலில் சிக்கல்கள் வந்தாலும் அதனை கண்டு பின்வாங்காமல், இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருங்கள். இதற்கு மன வலிமையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கச்சிதமாக செய்தால், நீங்களும் தொழிலில் கண்டிப்பாக வெற்றி வாகை சூட முடியும்.