கனடா, 2021ஆம் ஆண்டில், இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவில், 400,000 புலம்பெயர்ந்தோருக்கும் அதிகமானவர்களுக்கு கனடாவில் நிரந்தர வழிட உரிமம் வழங்கி சாதனை படைத்துள்ளது.
1867ஆம் ஆண்டு சுயாட்சி பெற்றதற்குப்பின் 400,000 புலம்பெயர்ந்தோருக்கும் அதிகமானவர்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் அளிக்கப்படுவது இது இரண்டாவது முறை என கூறப்படுகிறது. இதற்கு முன் 1913ஆம் ஆண்டில்தான் 400,000 புலம்பெயர்ந்தோருக்கும் அதிகமானவர்கள் கனடாவால் வரவேற்கப்பட்டார்களாம்!
அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு, 411,000 புலம்பெயர்ந்தோருக்கு கனடா நிரந்தர வழிட உரிமம் வழங்க உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்திதானே!
இந்த செய்தியை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தற்போது உறுதி செய்துள்ளது.
அத்துடன், புலம்பெயர்வோரை வரவேற்பதில் இதற்கு முந்தைய வரலாறுகள் அனைத்தையும் தகர்த்து இந்த ஆண்டில் சாதனை படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டம் துவங்குவதற்கு முன், கனடா 2020ஆம் ஆண்டில் 341,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், கொரோனாவால் உருவான தடைகள் காரணமாக 184,000 புலம்பெயர்வோர் மட்டுமே கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெறமுடிந்தது. ஆனாலும், புலம்பெயர்தல் மீதான தன் ஆதரவை இரட்டிப்பாக்கிய கனடா 2021இல் 401,000 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக அறிவித்தது.
தன் இலக்கை அடைவதற்காக, ஏற்கனவே கனடாவை வந்தடைந்து தற்காலிக வாழிட உரிமம் வைத்திருப்போருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்குதல், மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்குதல், எக்பிரஸ் நுழைவு முதலான திட்டங்களை கையில் எடுத்த கனடா, 401,000 புதிய புலம்பெயர்ந்தோர் என்னும் தனது இலக்கை எட்டியுள்ளது.
நேற்று இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, நாம் கடந்த ஆண்டு ஒரு இலக்கை நியமித்தோம், இன்று நாம் அதை எட்டிவிட்டோம். இது நமது நாட்டுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறினார்.