சூடனில் ராணுவத்திற்கு எதிராக போராடிய 13 பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெண்கள் பெரும்திரளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2019 அக்டோபரில் சூடானில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. சூடானை நீண்ட காலமாக ஆண்டு வந்த அதிபர் உமர் அல் பஷீரை அப்புறப்படுத்தி, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
இதனால் கொதித்தெழுந்த சூடான் மக்கள் நாடு முழுதும் கடும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பிரதமராக அப்துல்லா ஹாம்டோக் பதவியில் அமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் போராட்டம் நடத்திய சில அமைப்புகள் ராணுவத்துடன் சமீபத்தில் கைகோர்த்தன. அந்த இயக்கங்களுடன் ராணுவம் சில ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இதனால் ஜனநாயக ஆட்சியை விரும்பும் மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராட்டத்தை துவக்கினர். இந்த சூழலில் ராணுவத்திற்கு எதிராக போராடிய 13 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதன்படி கடந்த வாரம் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பெண்களை தூக்கிச் சென்று ராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்களை கண்டித்து தலைநகர் உள்பட பல்வேறு நகரங்களில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் கார்தோம், டமாசைன், கோஸ்டி, கடுகுலி, பக்ரி, கசாலா உள்ளிட்ட நகரங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பேரணியாக ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.