எரிவாயு அடுப்பு வெடித்தச் சிதறி பற்றி எரிந்த வீடு

புத்தளம் – கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் சிறிய சில்லறைக் கடையுடன் கொண்ட வீடொன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பு ஊடாக நீரை சூடாக்கியுள்ளார்.

இதன்போது, குறித்த அடுப்பு திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதுடன், திடீரென வீடும் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மூன்று பிள்ளைகளையும், தனது மருமகளையும், பேரப்பிள்ளையையும் வீட்டுக்கு வெளியே அழைத்து வந்த குறித்த தாய், வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு அயலவர்களின் உதவியையும் நாடியுள்ளார்.

கூரை தகரத்தினாலும், ஏனையவை பலகையினாலும் கொண்ட வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. குறித்த வீடு முழுமையாக தீயில் எரிந்துள்ளது.

இதனால், சில்லறைக் கடையுடன் கொண்ட குறித்த வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்களும், பொருட்களும், ஆடைகளும் இந்த தீயினால் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக வீட்டு உரிமையாளரான தாய் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிராம சேவகர் மற்றும் கற்பிட்டி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.