இலங்கையின் ஆலோசனையை புறக்கணித்த இந்தியா

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை முகாமைப்படுத்துவதற்காக துணை நிறுவனமொன்றை அமைக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் உதய கம்மன்பில பணிப்புரை விடுத்துள்ளார்.

முதலில் இந்த நிறுவனத்தை உருவாக்கி அதன் பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தமக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய நிறுவனத்திற்கு “டிரின்கோ பெட்ரோலியம் டேர்மினல் லிமிடெட் ” என்று பெயரிடப்படவுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனத்துடன்(ஐஓசி) யுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் நிலையிலேயே புதிய நிறுவன அமைப்பு பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை சீனன்குடாவில் உள்ள லோவர் டேங்க் பண்ணையில் இருந்து 14 எண்ணெய் தொட்டிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கும் (ஐஓசி), 24 மேல் பண்ணையில் உள்ள 24 தொட்டிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவும், மீதமுள்ள 61 தொட்டிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திச்செல்வதற்கான இலங்கையின் யோசனையை இந்திய எண்ணெய் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கொழும்பின் ஊடகம ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் கூட்டு உடன்படிக்கையின் கீழ் வரும் பண்ணைகளில் 51வீதத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், 49 வீத பங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் கொண்டிருக்கும்.

அதேநேரம் இந்திய நிறுவனத்துக்கான 14 தாங்கிகளும் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படும் என்று யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை, தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் ஒரு சந்திப்பை நடத்தி, சீனக்குடா எண்ணெய் தொட்டி பண்ணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார். எனினும் ஜே.வி.பி.யுடன் இணைந்த பெற்றோலிய பொதுத் தொழிலாளர் சங்கம் உட்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக ஆட்சேபித்துள்ளன.