ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2022 செப்டம்பர் முதல் ஐபோன்களை சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரேசில் நாட்டு வலைதளம் ஒன்றில் இதுபற்றிய தகவல் வெளியானது. எனினும், இந்த நடவடிக்கை 2023 ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் தான் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டெலிகாம் நிறுவனங்களிடம் இசிம் கொண்ட சாதனங்களை மட்டும் அறிமுகம் செய்ய தயாராக ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2022 இரண்டாவது காலாண்டு முதல் சில ஐபோன் 13 சீரிஸ் மாடல்களிலேயே சிம் கார்டு ஸ்லாட் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் எக்ஸ்.எஸ். சீரிஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.ஆர். சீரிஸ் மாடல்களில் டூயல் சிம் வசதி உள்ளது. எனினும், இவற்றில் ஒரு சிம் கார்டு ஸ்லாட் மற்றொன்று இசிம் வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் பட்சத்தில் தற்போது சில நாடுகளில் வழங்கப்பட்டு வரும் டூயல் சிம் வசதி என்ன செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதைய தகவல்களின்படி ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் சிம் கார்டு ஸ்லாட் நீக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.