எல்லோரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்று காரா பூந்தி.
இதனை மிகவும் சரியான முறையில் தயார் செய்ய ஒருசில வழிமுறைகளைக் கையாண்டாலே போதுமானது.
அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
மஞ்சள் பொடி – 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 3 சிட்டிகை
மிளகாய் வற்றல் பொடி – 3 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு பொடி – 1 ஸ்பூன்
சோடா உப்பு – 3/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
கடலை எண்ணெய் – காரா பூந்தி பொரிக்கத் தேவையான அளவு
கறிவேப்பிலை – 5 கீற்று
காரா பூந்தி செய்முறை
முதலில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை நன்கு சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, சோடா உப்பு, பெருங்காயப் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் மாவு மற்றும் பொடி வகைகளை ஒருசேரக் கலக்கவும்.
பின்னர் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமலும், அடிப்பரப்பின் ஓரங்களில் மாவு இல்லாமலும் ஒருசேர நன்கு கிளறி, தோசை மாவு பதத்திற்கும் சற்று நீர்மமாக கரைத்துக் கொள்ளவும்.
அதாவது மாவினை கரண்டியால் ஊற்றும்போது, படத்தில் உள்ளவாறு ஒரே சீராக விழ வேண்டும். இதுதான் சரியான பதம்.
மாவு விழுந்து பூந்தியாக மாறும் அளவினைப் பொறுத்து தண்ணீரையோ அல்லது மாவினையோ சேர்த்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். கரைத்து வைத்துள்ள மாவில் ஒருதுளியை எடுத்து எண்ணெயில் விடும்போது, மாவு உடனே மேலெழும்பி வந்தால் எண்ணெய் சரியான சூட்டில் உள்ளது என்பது பொருள்.
இப்பொழுது பூந்திக் கரண்டியை எண்ணெயின் மேற்பரப்பிற்கு சுமார் 10 செமீ உயரத்திற்கு மேல் வைத்து, ஒரு கரண்டி மாவினை மட்டும் எடுத்து ஊற்றவும். மாவு உருண்டையான பூந்திகளாக எண்ணெயில் விழும்.
எண்ணெயில் இருக்கும் பூந்திகளை அவ்வப்போது கரண்டியால் கிளறி விடவும். பூந்தியின் மேற்பரப்பில் எண்ணெய் குமிழி அடங்கியதும் பூந்திகளை வெளியே எடுத்து விடவும்.
இவ்வாறாக எல்லா மாவினையும் பூந்திகளாக பொரித்து எடுக்கவும். படத்தில் காட்டிவாறு கரண்டியினுள் கறிவேப்பிலையை வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்த கறிவேப்பிலையை காரா பூந்தியின் மேல் கொட்டவும்.
மிளகுப் பொடியை காரா பூந்தியின் மேல் தூவி நன்கு ஒரு சேர குலுக்கி விடவும். சுவையான காரா பூந்தி தயார். காரா பூந்தி ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு தண்ணீர் படாமல் தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கவும்.