இலங்கையில் ஒமிக்ரோன் நோயாளர் அடையாளம்

பேருவளையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பேருவளை சுகாதார பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் முதித அமரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

பேருவளை, சீனக் கோட்டையைச் சேர்ந்த 30 வயதுடைய மாணிக்கக்கல் வியாபாரிக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் நோக்கில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், “நாட்டில் கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனவே, இந்த அச்சுறுத்தல் தொடர்பில் உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இதுவரையில் 48 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இனங்காணப்படும் ஒமிக்ரோன் தொற்றாளர்களுக்கும் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை பின்பற்றப்படலாம்.

கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள 48 ஒமிக்ரோன் தொற்றாளர்களில் பெருமளவானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

இதேபோன்று அநுராதபுரம் மாவட்டத்திலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒமிக்ரோன் பிறழ்வால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும்.

மீண்டும் நாடு முடக்கத்துக்குச் செல்லாமல் இருப்பதற்குச் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார். .