நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 23-ந் தேதி சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (7-ந் தேதி) தொடங்குகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பாக்யராஜ் நேற்று அறிவித்தார். இவர் தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜும், அவரது அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். டைரக்டர்கள் சங்கத்தில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் 2 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாக்யராஜை எதிர்த்து போட்டியிடுவது குறித்து ஆர்.கே.செல்வமணி அணியினர் ஆலோசித்து வருகிறார்கள்.